திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள கூடூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது60). இவருக்கு சொந்தமான வணிக வளாகம் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் 4 பேர் வெளியே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் அவசர, அவசரமாக புறப்பட்டு செல்வதை அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பார்த்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த தமிழரசன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அப்போது தமிழரசன் திருப்புலியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை பிடிக்க முயன்றபோது தமிழரசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் இந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் வடபாதிமங்கலம் புள்ளமங்கலம் பகுதியை சேர்ந்த அசோகன் மகன் ஆகாஷ் (19), வடபாதிமங்கலம் ஊட்டியாணி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விஜய் (19), வடபாதிமங்கலம் இளமங்கலம் பகுதியை சேர்ந்த குமார் மகன் பிரதாப் (18), கூத்தாநல்லூர் அண்ணா காலனியை சேர்ந்த ரமேஷ் மகன் மதன் (19) ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதில் ஆகாஷ் (19) என்பவர் மட்டும் பிடிபட்டார். தப்பி ஓடிய விஜய், பிரதாப், மதன் ஆகிய 3 பேரையும் பிடிப்பதற்காக போலீசார் துரத்தி சென்றனர். அப்போது 3 பேரும் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். திருவாரூர் அருகே வடகட்டளை என்ற இடத்தில் சென்றபோது மதகு தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் ஆகாஷை கைது செய்து திருவாரூர் கோர்டில் ஆஜர்படுத்தி நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனர்.
விஜய், பிரதாப், மதன் ஆகிய 3 பேரும் தப்பி சென்றபோது விபத்தில் காயம் அடைந்ததாக வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் பிடிபட்டுள்ள மதன், பிரதாப் ஆகிய 2 பேரும் மன்னார்குடி அரசு கலை கல்லூரியில் படித்து வருகின்றனர். விஜய் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
பாலிடெக்னிக் படித்து வந்த ஆகாஷ் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.