பனவடலிசத்திரம்:
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது, சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு அடிக்கடி பஸ் வசதி இருந்தது. தற்போது நெல்லையில் இருந்து தென்காசியை பிரித்து தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் தென்கிழக்கு கடைக்கோடி ஊராக பனவடலிசத்திரம் கிராமம் உள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரமான தென்காசிக்கு இதுவரை நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சங்கரன்கோவில் அல்லது நெல்லைக்கு சென்று அங்கிருந்து தென்காசிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.
இதையடுத்து பனவடலிசத்திரத்தில் இருந்து தென்காசிக்கு நேரடி பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தற்போது பனவடலிசத்திரத்தில் இருந்து தென்காசிக்கு புதிய பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதனை சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி டி.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பஸ் பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூர், நடுவக்குறிச்சி, வீரசிகாமணி, சேர்ந்தமரம், வேலாயுதபுரம், இடைகால் வழியாக தென்காசிக்கு சென்று வரும் என்பது குறிப்பிடத்தக்கது.