புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து 18 மாதங்கள் ஆகியும் புதிய ஒப்பந்தம் செய்யப்படாததால் தமிழகம் முழுவதும் பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்ட களத்தில் உள்ளனர். தொ.மு.ச, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ. டி.யூ.சி.. ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
நேற்று காலையில் தொடங்கிய வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்கம் மற்றும் ஆதரவு சங்க தொழிலாளர்கள் மூலம் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் அன்றாடம் வேலைக்கு செல்வோர், வெளியூர் பயணம் மேற்கொண்டவர்கள் அவதிக்குள்ளானார்கள். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை முழுமையாக இயக்க முயற்சித்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
சென்னையில் 57 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் முழுமையாக ஓடாததால் இரவுவரை பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.
பணிக்கு வரக்கூடிய டிரைவர்கள், கண்டக்டர்களை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்து மறிக்கும் சம்பவம் அனைத்து பணிமனைகளிலும் நடந்தது. சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், திருப்பூர், திருச்சி, மதுரை, கடலூர், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் பணிமனைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பணிக்கு வருபவர்களை தடுத்து மறித்தனர்.
மேலும் பணிமனைகளில் இருந்து பஸ்களை வெளியே எடுக்க விடாமல் தடுத்தனர். பணிக்கு வந்த ஊழியர்களை தரக்குறைவாக பேசியதால் அவர்கள் பஸ்களை இயக்காமல் திரும்பி சென்றனர்.
இதனால் இன்று மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயகப்பட்டன. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் இன்று பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மிக குறைந்த அளவில் ஊழியர்கள் வந்ததால் மாற்று ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் செய்து வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாகி வருவதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்களும் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகிறார்கள். அவசர தேவைக்கு செல்வோர், வேலைக்கு செல்லக்கூடியவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ்கள் ஓடாததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க தொடங்கி விட்டனர். குறைந்த அளவு தூரத்துக்கு ரூ.100 வசூலித்தனர்.