கோப்புபடம் 
செய்திகள்

சென்னையில் இருந்து 26 மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்து - திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இந்த மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம்,திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த 4 மாவட்டங்களிலும் கடந்த 21-ந் தேதி முதல் பஸ் சேவை தொடங்கியது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் அடுத்த கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்கள் தவிர ஏனைய 27 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தை தொடங்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இந்த மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மற்ற 27 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது.

47 நாட்களுக்கு பிறகு மாவட்டங்களுக்கு இடையே பஸ் சேவை தொடங்குவதால் பொதுமக்களின் நடமாட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து 26 மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் பயணிகளை ஏற்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு அனுமதி வழங்காத 11 மாவட்டங்களுக்கு பஸ் சேவை நடைபெறாது. மற்ற மாவட்டங்களில் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் சேவை தொடங்க உள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நீண்ட தூர பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களில் குளிர்சாதன வசதி இல்லாமல் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஸ் போக்குவரத்து இரவு எத்தனை மணி நேரம் வரை நடைபெறும் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

8 அரசு போக்குவரத்துக்கழக பஸ்களையும் இயக்க தயார்படுத்தப்படுகிறது. டிரைவர், கண்டக்டர்கள் பணிக்குவர அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அனைத்து பஸ்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் இன்றும் நாளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.