இடிந்து விழுந்த மாட்டு கொட்டகை 
செய்திகள்

கவுந்தப்பாடியில் மழைக்கு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் பலி

கவுந்தப்பாடியில் மழைக்கு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் 14 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 2-வது நாளாகவும் கவுந்தப் பாடியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 44.4 மில்லிமீட்டர் மழை கவுந்தப்பாடியில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் இன்று காலை கவுந்தப்பாடியில் மழைக்கு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

கவுந்தப்பாடி பச்சப்பாளி, ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 68).விவசாயி. இவர் தனது மனைவியுடன் வசித்து கொண்டு விவசாயம் செய்து வந்தார்.

தனது வீட்டின் முன்பு சிமெண்ட் சீட்டுகளால் வேயப்பட்ட கொட்டகை 30 அடி நீள செட்டில் 10 ஆடுகள், 2 எருமை மாடுகள் மற்றும் 1 எருமை கன்று ஆகியவற்றை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்ததால் கொட்டகை ஈரத்தன்மையுடன் இருந்தது. இன்று காலை 7.30 மணியளவில் பழனியப்பன் கொட்டகையை சுத்தம் செய்து கொண்டிருக்கையில், தொழுவத்தின் ஒருபுறம் மட்டும் கட்டப்பட்டிருந்த சுவர் திடீரென இடிந்து பழனியப்பன் மற்றும் ஆடு, எருமை மாடுகள் மீது விழுந்தது.

இதில் பழனியப்பனுக்கு தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பழனியப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பழனியப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 ஆடுகளும் இறந்தன. 1 எருமை கன்று மற்றும் 2 ஆடுகள் பலத்த காயம் அடைந்துள்ளன.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.