கொலை 
செய்திகள்

நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி தம்பியை கொன்ற பிரியாணி மாஸ்டர்

கோவையில் குடிபோதையில் தகராறு செய்த தம்பியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற பிரியாணி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

கோவை:

கோவை தெற்கு உக்கடம் எஸ்.எச். காலனியைச் சேர்ந்தவர் முத்தாண் என்ற செல்வராஜ் (வயது 40). இறைச்சிக்கடையில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர்.

வேலைக்கு சென்று விட்டு அவர் தினந்தோறும் மதுகுடித்து விட்டு வீடு திரும்புவார். அப்போது குடிபோதையில் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபடுவார்.

செல்வராஜின் அண்ணன் சுப்பிரமணி (52) அதே பகுதியில் குடியிருந்து வருகிறார். அவரிடமும் செல்வராஜ் குடித்து விட்டு தகராறு செய்து வந்தார்.

நேற்று இரவு 8 மணிக்கு செல்வராஜ் மதுகுடித்து விட்டு சுப்பிரமணி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த சுப்பிரமணியிடம் அவர் தகராறு செய்தார். ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, செல்வராஜை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அருகில் கிடந்த நைலான் கயிற்றை எடுத்து செல்வராஜின் கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்தார்.

பின்னர் இதுபற்றி சி.எம்.சி. காலனியில் வசிக்கும் அவரது சகோதரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். குடிபோதையில் செல்வராஜ் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தார். சகோதரி மற்றும் உறவினர்கள் நேரில் வந்து பார்த்தனர். அப்போது செல்வராஜின் கண் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வராஜை அவரது சகோதரர் சுப்பிரமணி கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து சுப்பிரமணியை போலீசார் தேடினர். அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார்.

இருந்தாலும் தொடர் சோதனை நடத்தி அதே பகுதியில் பதுங்கி இருந்த சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொல்லப்பட்ட செல்வராஜூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கைதான சுப்பிரமணி பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்தவர்.