வாத்துகள், கோழிகள் அழிப்பு 
செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு- 40 ஆயிரம் வாத்துகள், கோழிகள் அழிப்பு

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக குட்டநாடு, கோட்டயத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்து, கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட எடத்துவா, பள்ளிப்பாடு, தாளவாடி, தழக்காகர ஆகிய பகுதிகளில் ஏராளமான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன.

ஒவ்வொரு பண்ணையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வளர்க்கப்பட்டன. சமீபத்தில் இந்த பறவைகள் நோய் வாய்ப்பட்டு இறந்தது. இதுபற்றி அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடந்த ஆய்வில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவித பாக்டீரியாக்கள் மூலம் எச்.5, என்.8 வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வைரஸ் மூலம் மனிதர்களுக்கும் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டதால், இப்பண்ணைகளில் உள்ள பறவைகள் அனைத்தையும் அழித்து விட அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள பறவை பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த பறவைகளை அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குட்ட நாட்டில் 17 ஆயிரம் வாத்துகள், கோட்டயத்தில் 8 ஆயிரம் பறவைகள் என மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்து, கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

இதுபற்றி மாநில கால்நடைத்துறை மந்திரி ராஜு கூறும்போது, பறவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டதால் அவற்றை அழிக்க உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் பறவை பண்ணையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு அரசு நிச்சயம் இழப்பீடு வழங்கும், என்றார்.

இதற்கிடையே கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் அதன் அண்டை மாநிலமான தமிழகத்திற்குள் வராமல் தடுக்க மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கேரளாவையொட்டி உள்ள மாவட்டங்களான குமரி, நெல்லை, தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு மாவட்ட எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் அங்கிருந்து கோழி, வாத்து போன்ற பறவைகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதற்காக 26-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கால்நடைத்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.