கோப்புப்படம் 
செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை நேற்று போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் நாச்சனூர் பகுதியை சேர்ந்தவர் அருள்மணி. தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி மாலினி (வயது 19). இவருக்கு கடந்த 19-ந்தேதி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் காலை பிரசவ வார்டில் இருந்து பச்சிளங்குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்றார். இந்த காட்சி ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

குழந்தையை கடத்திய பெண்ணை பிடிப்பதற்காக தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில், குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் நடந்த நேரத்தில் இருந்த வாகன போக்குவரத்து தொடர்பான பதிவுகளை பார்வையிட்டு போலீசார் தீவிர ஆய்வு நடத்தினார்கள். அப்போது தர்மபுரியில் உள்ள இருவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவருடன் அந்த பெண் கடத்தப்பட்ட கைக்குழந்தையுடன் சென்றது தெரியவந்தது. மேலும் இண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த குழந்தை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பச்சிளங்குழந்தையை நேற்று காலை மீட்டனர்.

குழந்தை கடத்தல் தொடர்பாக இண்டூரை சேர்ந்த தஞ்சியா, அவருடைய கணவர் ஜான்பாஷா (24), தஞ்சியாவின் தாயார் ரேஷ்மா (41), பாட்டி பேகம்(60) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையை தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் முன்னிலையில் தந்தை அருள்மணி, பாட்டி ஜெயலட்சுமி ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

பச்சிளங்குழந்தை கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT