ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா (இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகியோர் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்புகிறார்கள். இன்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் சுமித் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), டேவிட் வார்னர் (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மேக்ஸ்வெல் (பெங்களூரு) உள்பட 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்திய பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு நேரடியாக வருவதற்கு மே 15-ந் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டி முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கருத்து தெரிவிக்கையில், ‘ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரர்களின் ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் இருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 10 சதவீத தொகையை பெறுகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு நாங்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவதற்கு அந்த தொகையை செலவழிக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். நாங்கள் மிகவும் கட்டுப்பாடான கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போகிறோம். எனவே நாங்கள் நாடு திரும்ப ஆஸ்திரேலிய அரசு தனி விமானம் அனுப்பும் என்று நம்புகிறோம். போட்டி முடிந்த பிறகு நாங்கள் பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்ப வேண்டும்’ என்றார்.
இதற்கிடையில் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.