கோப்பு படம். 
செய்திகள்

மனைவியை கொல்ல முயற்சி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்செங்கோடு அருகே மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி பனங்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 57). விவசாயி. பழனிசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி பழனிசாமி தனது மனைவி சுசிலாவிடம் (53) பணம் கேட்டு தகராறு செய்து உள்ளார். இந்த தகராறு முற்றியதில் சுசிலாவின் தலையை பிடித்து சுவற்றில் மோதி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பழனிசாமியின் மகள் லாவண்யா (25) திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பழனிசாமி, போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.