கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சுந்தரமூர்த்தி.
இவர் மேட்டுப்பாளையம் நால்ரோட்டில் நடந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு விபத்தில் காயம் அடைந்த தேவராஜ் மற்றும் ஸ்ரீதேவியிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு விபத்தை ஏற்படுத்திய மோகன் ஜோன்ஸ் என்பவரும் இருந்தார்.
போலீஸ்காரர் சுந்தரமூர்த்தி விசாரித்து கொண்டிருந்த போது ஆஸ்பத்திரிக்கு விபத்தில் காயம் அடைந்த தேவராஜன் மகன் அனித்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் அங்கு வந்தார்.
அவர் விபத்தை ஏற்படுத்திய மோகன் ஜோன்ஸ் என்பவருடன் தகராறில் ஈடுபட்டு, அவரை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கினார்.
இதில் அவர் காயம் அடைந்தனர். இதனை பார்த்த போலீஸ்காரர் அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அனிஷ்குமாரும், அவரது நண்பர்களும் சேர்ந்து போலீஸ்காரரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சட்டையை பிடித்து இழுத்து தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த காட்சிள் அனைத்தும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
இதற்கிடையே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டுப்பாளையம் போலீசில் சுந்தரமூர்த்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரை தாக்கிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.