ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. இதனால் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எப்போதும் ஒரு விதமான பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாக பின்பற்ற வேண்டும், அத்துமீறிய தாக்குதல்களை நடத்தக்கூடாது என இந்திய, பாகிஸ்தான் ராணுவம் இடையே திடீர் உடன்பாடு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சண்டைகள் இல்லை. அமைதி நிலவுகிறது. இந்த உடன்பாடு ஏற்பட்டு 100 நாட்கள் ஆகி உள்ளது.
இந்த தருணத்தில் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் திடீரென காஷ்மீருக்கு சென்றார். அவர் நேற்று முன்தினம் ஸ்ரீநகருக்கு சென்றடைந்தார்.
அங்கிருந்து அவர் வடக்கு பிராந்திய துணைத்தளபதி ஒய்.கே.ஜோஷி, ‘சைனார் கார்ப்ஸ்’ படைப்பிரிவின் கமாண்டர் துணைத்தளபதி டி.பி. பாண்டே ஆகியோருடன் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள அலகுகளை பார்வையிட்டார்.
எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியின் பாதுகாப்பு நிலவரத்தை உள்ளூர் கமாண்டர்கள் அவரிடம் எடுத்துக்கூறினார்கள். அத்துடன் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
பயங்கரவாத மயமாக்கல் மற்றும் இளைஞர்களை பயங்கரவாத அணிகளில் சேர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களின் அமைப்பை அடையாளம் கண்டு, குறி வைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ தளபதி நரவனேயிடம் உள்ளூர் ராணுவ அதிகாரிகள் விளக்கினர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு உள்ளூர் அளவில் ஆள் சேர்ப்பைத் தடுப்பதற்கான முயற்சிகள் பற்றியும், உள்ளூர் பயங்கரவாதிகள் சரண் அடைவதை எளிமையாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ராணுவ தளபதி நரவனே, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒரு பக்கம் பாகிஸ்தானால் தூண்டப்படும் பயங்கரவாதம், இன்னொரு புறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆகிய இருபெரும் சவால்களுக்கு மத்தியிலும் இரவு பகல் பாராது பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்கள் மற்றும் கமாண்டர்களுடன் கலந்துரையாடினார்.
வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை திறம்பட சந்திக்க தயாராக இருக்க வேண்டியதின் தேவையை அவர், அவர்களிடம் வலியுறுத்தினார்.
மேலும், வீரர்களின் திடமான மன உறுதியையும், செயல்பாட்டு தயார் நிலையையும் ராணுவ தளபதி நரவனே மனதார பாராட்டினார்.
தளபதி நரவனேயின் காஷ்மீர் பயணம் குறித்து டுவிட்டரில் ராணுவம் வெளியிட்ட பதிவில், “காஷ்மீருக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட தளபதி நரவனே, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியின் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்தார்” என கூறப்பட்டுள்ளது.