ராணுவ தளபதி நரவானே 
செய்திகள்

வங்காளதேச ராணுவ அதிகாரிகளை சந்தித்தார் ராணுவ தளபதி நரவானே

வங்காளதேச தளபதி அசிஸ் அகமது விடுத்த அழைப்பை ஏற்று இந்திய ராணுவ தளபதி நரவானே அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

டாக்கா:

இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அகமது அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று 5 நாள் பயணமாக நரவானே வங்காளதேசம் சென்றுள்ளார்.

டாக்காவில் நேற்று அவர் அந்த நாட்டு ராணுவ மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். குறிப்பாக, வங்கதேச ராணுவத்தின் 10-வது இன்பன்ட்ரி படைப்பிரிவை அவர் பார்வையிட்டார்.

அங்கு அவர் வங்கதேச ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அத்துடன் இருநாட்டு ராணுவங்களின் நீடித்த நட்பை நினைவுகூரும் வகையில் ராமு கண்டோன்மென்ட் பகுதியில் மரக்கன்று ஒன்றையும் அவர் நட்டு வைத்தார்.

முன்னதாக, வங்காளதேச தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடத்தில் நேற்று முன்தினம் அவர் அஞ்சலி செலுத்தினார்.

வங்காளதேசம் இந்த ஆண்டு தனது சுதந்திர தின பொன்விழாவையும், முஜிபுர் ரகுமானின் பிறந்தநாள் நூற்றாண்டு தினத்தையும் கொண்டாடி வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடியும் சமீபத்தில் வங்காளதேசம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.