மழைநீர் அகற்றம் 
செய்திகள்

அரியாங்குப்பம் பகுதியில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

அரியாங்குப்பம் பகுதியில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. இதனை ஆணையர் சவுந்திரராஜன் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.

அரியாங்குப்பம்:

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் தாழ்வான பகுதி, காலி மனைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற ஊழியர்களுக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு, நாகூரார் தோட்டம், சண்முகம் நகர், பி.சி.பி. நகர், காக்காயந்தோப்பு மற்றும் மணவெளி தொகுதி சின்ன வீராம்பட்டினம், ஓடைவெளி, கலைஞர் நகர்- கன்னியாக்குளம், ராயல்நகர், டோல்கேட்-அரவிந்தர் நகர், நோணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது. இதனை ஆணையர் சவுந்திரராஜன் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.

SCROLL FOR NEXT