ஏப்ரல் 1ந்தேதி 
செய்திகள்

நாளை ஏப்ரல் 1ந்தேதி- வதந்தி பரப்புவார்கள்.... உஷார்

தற்போது கொரோனா மற்றும் தேர்தல் காலம். இதை மையமாக வைத்து நாளை ஏப்ரல் 1-ந்தேதி வதந்தி பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மாலை மலர்

சென்னை:

நாளை ஏப்ரல் மாதம் 1-ந்தேதி பிறக்கிறது.

ஏப்ரல் 1-ந்தேதி என்றாலே என்ன நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நாளை முட்டாள் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கிறார்கள்.

இந்த நாளில் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, தவறான தகவலை சொல்லி அச்சுறுத்துவது, நம்ப முடியாத சில வி‌ஷயங்களை பரப்புவது போன்றவற்றை செய்வார்கள்.

எனவே உங்களையும் நாளை யாராவது ஏமாற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கலாம். எனவே உஷாராக இருங்கள். தற்போது கொரோனா மற்றும் தேர்தல் காலம். எனவே இதை மையமாக வைத்துதான் வதந்தி பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எந்த தகவல் காதில் விழுந்தாலும் அதை உண்மைதானா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினமாக உருவானது எப்படி? என்பதற்கு சில வரலாறுகள் இருக்கின்றன.

பிரான்ஸ் நாட்டில்தான் முதல் முதலாக ஏப்ரல் 1-ந்தேதியை முட்டாள் தினமாக கடைபிடித்தனர். ஆரம்பத்தில் அப்போதைய காலண்டர்படி ஏப்ரல் 1-ந்தேதிதான் புத்தாண்டு தினமாக இருந்துள்ளது.

1562-ம் ஆண்டுவாக்கில் அப்போது போப் ஆண்டவராக இருந்த 13-வது கிரேகோரி பழங்கால ஜூலியன் காலண்டர் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தினார். அதன்படி ஜனவரி 1-ந்தேதிதான் புத்தாண்டு தொடங்குகிறது. புதிய காலண்டர் முறையை பல நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

ஆனால் சிலர் பழைய முறைப்படி ஏப்ரல் 1-ந் தேதியையே புத்தாண்டாக கருதி கொண்டாடி வந்தனர். அப்படிபட்டவர்களை முட்டாள்கள் தினமாக அறிவித்து கேலி செய்தனர்.

இதனால் ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினமாக மாறி விட்டது. அதிலிருந்து ஏப்ரல் 1-ந்தேதி என்றாலே வதந்தி பரப்புவது, ஏமாற்றுவது உலகம் முழுவதும் நடைபெறும் செயலாக மாறி விட்டது.