ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்லக்காளை. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 50). இவர் கால்நடைகள் வளர்த்து வருவதுடன், பால் வியாபாரமும் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பழனியம்மாள், தனது மாட்டு கொட்டகையில் கறந்த பாலை அருகில் உள்ள பண்ணைக்கு கொண்டு சென்று ஊற்றினார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தேனி-மதுரை சாலையை கடக்க முயன்றார். இதற்கிடையே அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று பழனியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பழனியம்மாளை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.