தென்காசி:
தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் பஞ்சாயத்து எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 9 மாத காலமாக வழங்கப்படாத குடும்ப நல நிதியை உடனே வழங்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சலீம் முகமது மீரான் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி நாயனார் கோரிக்கைகள் குறித்து பேசினார். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் காந்தி, துணைத்தலைவர் சங்கரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கருப்பையா, அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வூதியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் அல்போன்ஸ் சுவாமிநாதன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் நாராயணன் ஆகியோர் பேசினார்கள்.
போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் பாலுசாமி நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் சின்னத்தம்பி நன்றி கூறினார்.