கோவை:
கோவை ஆலாந்துறை நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த கிட்டுசாமி (வயது 45) கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவரது மகள் வீட்டின் முன்பு உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (25) என்பவர் குடிபோதையில் கிட்டுசாமியின் வீட்டின் முன்பு சுற்றிக் கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த கிட்டுசாமி அவரிடம் எதற்காக இங்கு சுற்றிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கருப்புசாமி அங்கிருந்து சென்றார். அப்போது வேலைக்குச் சென்று வீடு திரும்பிய கிட்டுசாமியின் மகன் உதயகுமாருக்கு, கருப்புசாமி தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு சென்றது தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த உதயகுமார், கருப்புசாமியின் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்து வீடு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த கருப்புசாமி தனது தம்பிகள் சஜித்குமார் (21), சாஜூ (17) மற்றும் நண்பர்கள் சபரி, ஹரிஷ், சுதாகர் ஆகியோரை அழைத்துக்கொண்டு கிட்டுசாமி வீட்டிற்கு கத்தி மற்றும் மரகட்டைகளுடன் சென்றார்.
அப்போது அங்கிருந்த கிட்டுசாமி மற்றும் அவரது மகன்கள் சூர்யா (24), உதயகுமார் (26), உறவினர்கள் அய்யாசாமி (22), பிரசாந்த் (28) ஆகியோருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் கிட்டுசாமி மற்றும் அய்யாசாமிக்கு கத்தி குத்து விழுந்தது.
இதேபோன்று கிட்டுசாமியின் மகன்கள் தாக்கியதில் கருப்புசாமி மற்றும் சஜித்குமாருக்கு குத்து விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் ஆலாந்துறை போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா மற்றும் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.