ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி ஆலங்குளம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் பேச்சுக் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் மது அருந்த வருமாறு அந்த நபர் அழைக்க, பெருமாளும் அவருடன் மொபட்டில் சென்றுள்ளார். புதுப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு காட்டு பகுதியில் அமர்ந்து இருவரும் மது அருந்தியுள்ளனர். பெருமாள் அளவுக்கு அதிகமாக குடித்து மயங்கிய நிலையில், அவரது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை திருடிக் கொண்டு அந்த நபர் தப்பி சென்றுவிட்டார்.
போதை தெளிந்ததும், தன்னுடைய மோதிரத்தை மர்மநபர் திருடி சென்றதை அறிந்த பெருமாள், ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், மானூர் அருகே வாகைக்குளத்தை சேர்ந்த வேல்சாமி (57) என்பவர் பெருமாளிடம் மோதிரத்தை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து 5 கிராம் மோதிரத்தை மீட்டனர்.