ஜல்லிக்கட்டு 
செய்திகள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு- மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியது

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

மாலை மலர்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லுரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.

இதேபோல் அவனியாபுரத்தில் 14-ந் தேதியும், பாலமேட்டில் 15-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வாடிவாசலில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று தடுப்புகள் அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக போட்டி நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

இதையொட்டி நள்ளிரவு முதலே மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் குவிந்தனர்.

அங்குள்ள அரசு ஒன்றிய தொடக்க பள்ளிகளில் வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

வீரர்கள் 4 பாஸ்போட் சைஸ் போட்டோவுடன், ஆதார் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் ஒன்று எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், எடை 50 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். உயரம் 5 அடிக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உடலில் பெரிய காயங்கள், தழும்புகள் அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் ஏதும் இருக்க கூடாது.

தினமும் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்களாக வீரர்கள் இருத்தல் கூடாது (சர்க்கரை நோய், இதர நோய் போன்றவைகள் ). இது போன்று பல கட்டுப்பாடுகளுடன் வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த உடற்தகுதி பரிசோதனை முகாமில் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் அர்ஜுன்குமார் தலைமையில் வட்டார மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் மருத்துவர்கள் மோகன்குமார், ஹமிதா, பூபேஸ் குமார் ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் ராமன், ராஜசேகர், முருகன் உட்பட மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யும் பணியில் 80 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீரர்களை பரிசோதித்து வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அனுமதி சீட்டு அடையாள அட்டை வழங்கினர்.

இருப்பினும் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற முடிவு வந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களுக்கு மிகாமலும், 650 காளைகளும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் தனித்தனியாக மாடுபிடி வீரர்கள் தேர்வு நடத்தப்படும்.

ஆனால் இந்த ஆண்டு இன்று ஒரே நாளில் 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடிவீரர்கள் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.