ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது (வயது 40), இவரது மனைவி ஜமுனா (35) இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக கத்தார் நாட்டில் வசித்து வருகின்றனர். விடுமுறை நேரங்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவர்களுக்கு சொந்தமான வீடு மாதவலாயத்தில் உள்ளது. வீட்டை முகமது தம்பி ஜாகீர் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. இந்த பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்ததாரர் வீட்டில் ஏணி வைத்துவிட்டு சென்று விட்டதால் அதை எடுப்பதற்காக இன்று காலை வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஜாகீருக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 35 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து ஜாகீர் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டிய வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.