கொரோனா மீட்பு விகிதம் 
செய்திகள்

கொரோனா மீட்பு விகிதம் உயர்கிறது- புதிதாக குணமடைவோரில் 74 சதவீதம் கொண்ட 10 மாநிலங்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த 7 நாட்களாக உயிரிழப்பு 500-க்கும் குறைவாகவே உள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 30,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,628 ஆக உயர்ந்துள்ளது. 3.59 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து 93.24 லட்சம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விகிதம் 94.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,494 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 74.46 சதவீதம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் ஒரே நாளில் 4748 பேர் குணமடைந்துள்ளனர். 

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில், 78.05 சதவீத மரணம், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பதிவாகி உள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 87 உயிரிழப்புகளும், டெல்லியில் 60, மேற்கு வங்கத்தில் 50 மரணங்கள் பதிவாகி உள்ளன. கடந்த 7 நாட்களாக உயிரிழப்பு 500-க்கும் குறைவாகவே உள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவர வரைபடங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.