கைது 
செய்திகள்

உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் அமைச்சர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் அதிரடியாக கைது

அமைச்சர் வளர்மதி பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 6 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் இஸ்லாமியர் தெருவில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார்.

அவர் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் தற்போதைய ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல். ஏ.வான அமைச்சர் வளர்மதி, மாவட்ட துணைச் செயலாளர் வனிதா உள்ளிட்டோரும் சென்றனர்.

இந்தநிலையில் அமைச்சர் வளர்மதி இந்த பகுதிக்குள் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று கூறி அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அமைச்சர் உள்ளிட்டோர் திடீர் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அமைச்சரை எதிர்த்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாஸ், காதர் மொய்தீன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைதானவர்கள் மீது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி 6 பிரிவகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

SCROLL FOR NEXT