கோப்பு படம் 
செய்திகள்

ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் நிரப்பிய 5 லாரிகள் ரெயில் மூலம் மதுரை வந்தது

மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது 26 டன் கொள்ளவு ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. அதிலிருந்து தினமும் 16 டன் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மதுரை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கோவை, மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகமாக உள்ளது. இதையடுத்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் 66.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரெயில் மூலம் மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

இந்த ஆக்சிஜன் லாரிகள் ரெயில் நிலைய நடை மேடையில் இறங்குவதற்கு வசதியாக சாய்வுதள பாதை புதிதாக அமைக்கப்பட்டது.

தமிழகத்துக்கு வந்த 24-வது ஆக்சிஜன் ரெயில் ஆகும். தென் மாவட்டங்களுக்கு வந்த 3-வது ஆக்சிஜன் ரெயில்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை தமிழகத்திற்கு ரெயில் மூலம் 1,393.71 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை வந்த ஆக்சிஜன் லாரிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

மதுரைக்கு தற்போது வந்து உள்ள 66.12-ல் 20 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மதுரைக்கு சப்ளை செய்யப்படும். மீதம் உள்ளவை திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், கரூர், நாமக்கல்லுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது 26 டன் கொள்ளவு ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. அதிலிருந்து தினமும் 16 டன் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தனியாருக்கு 8 மெட்ரிக் டன் தேவை. அதை பூர்த்தி செய்யும் வகையில் திரவ மருத்துவ ஆக்சிஜன், வடமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த 5 நாட்களில் மேலும் ஒரு ஆக்சிஜன் ரெயில் மதுரைக்கு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.