சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
வட கடலோர தமிழ்நாட்டில் 1.5 கிலோமீட்டர் உயரம்வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (25-ந்தேதி) புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
26-ந்தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதேபோல் 27-ந்தேதி மற்றும், 28-ந்தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், கோயம்புத்தூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 10 சென்டி மீட்டர், திருமூர்த்தி அணையில் 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.