ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை ஒழிப்பதில், ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீநகரின் லவாய்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலையில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
நீண்டநேரம் நடந்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களின் அடையாளம், அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.