நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள மாதவலாயம் மைதீன்புரத்தை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 57). இவர் 11 வயது சிறுமி, 10 வயது சிறுமி, 9 வயது சிறுமி என 3 சிறுமிகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு சாக்லெட் கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து 11 வயது சிறுமியின் தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அப்போதைய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கண்மணி போக்சோ சட்டத்தின் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல்லாவை கைது செய்தார்.
பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள மகிளா சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கை சிறப்பு கோர்ட்டு நீதிபதி எழில்வேலவன் விசாரித்து வந்தார். அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வக்கீல் முத்துக்குமாரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது நீதிபதி எழில்வேலவன் குற்றம் சாட்டப்பட்ட அப்துல்லாவுக்கு போக்சோ சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ஜெயில் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஜெயில் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி 10½ ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.