கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

விழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது

விழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் நகைகள் மீட்கப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் கே.கே.நகரை சேர்ந்தவர் டாக்டர் ராமசேசு. கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக டாக்டர் ராமசேசு அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, பிரகாஷ் மற்றும் போலீசார் விழுப்புரம் போக்குவரத்து பணிமனை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூரை சேர்ந்த பெருமாள்(வயது 25), பூங்குணத்தை சேர்ந்த ரமேஷ்(51), ஊரப்பாக்கத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(24) ஆகியோர் என்பதும், இவர்கள் வீடு வாடகைக்கு கேட்பது போல் சென்று ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. அந்த வகையில் டாக்டர் ராமசேசு வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 13 பவுன் நகைகள் 2 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் கொள்ளையடித்து கடலூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 42 பவுன் நகைகள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சமாகும். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்களது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT