சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சென்னை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வின் மீதும், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதும், மத்திய மந்திரியாக பணியாற்றி 2 ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 3-ந்தேதி நீங்கள் (முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி) குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். அதற்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்தேன். அப்போது யார் ஊழல்வாதி, எந்த கட்சி ஊழல் கட்சி என்பதை பகிரங்கமாகவும், பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டேன்.
மேலும் தி.மு.க.வின் மீது நீங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் உங்களால் ‘அம்மா’ என்று சுயநலக் காரியங்களுக்காக அழைக்கப்படும் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் என்றும், அவர் சிறை செல்ல காரணமாக இருந்த கீழமை நீதிபதி குன்ஹாவின், தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டால் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்றும், எனவே ‘அம்மா’ வழியில் தங்கள் ஆட்சி நடைபெறுவதாக கூறுவது ஊழல் செய்ய அனுமதியும், அங்கீகாரமும் கேட்கும் வெட்கமற்ற செயல் என்றும் கூறியிருந்தேன்.
இதுகுறித்து விவாதித்து உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த என்னை கோட்டைக்கு அழையுங்கள் என்று வேண்டியதோடு, அப்போது உங்கள் அமைச்சரவையையும், உங்களின் எஜமான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலையும், மாநில அட்வகேட் ஜெனரலையும் அழையுங்கள் என்று பகிரங்க சவால் விட்டிருந்தேன்.
என்னுடைய நேர்காணலில், நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பேற்கும் அதேவேளையில், அவை பொய்யென்று நிரூபிக்க நீங்கள் எடுத்த பொய்க்கால் குதிரை முயற்சிகள் பலன் தராது என்பதை உங்களுக்கு உணர்த்தி, உங்களை நாகரிகமான ஆரோக்கியமான அரசியலுக்கு நெறிப்படுத்தவே விரும்புகிறேன். விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல் என்று எந்த இடத்திலும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இல்லை. 2 ஜி ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று நீதிபதி ஓ.பி.சைனி கூறியதை உங்கள் சட்ட அறிஞர்கள் உங்களுக்கு சொல்லாமல் இருந்திருக்கமாட்டார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்ட எந்த அரசியல்வாதியும், உங்கள் அம்மாவை போல் நீதிமன்ற தாக்குதலுக்கு ஆளானதில்லை என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் பகுதியிலிருந்து திறந்த மனநிலையில் உள்ள சாதாரண அறிவுள்ள எவரும் அறியலாம். நீங்களும் அறியவேண்டும் என விரும்புகிறேன். ஜெயலலிதாவின் கொள்ளையை, சுப்ரீம் கோர்ட்டு தோலுரித்த பிறகும், ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதாக நீங்களோ, உங்களின் பிரதிநிதிகளோ கூறுவீர்களேயானால், உங்களின் நேர்மையை சமூகம் சந்தேகித்தே தீரும்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஆளாகி, ஐகோர்ட்டால் போதுமான ஆதாரம் உள்ளதென்றும், நீங்கள் முதல்-அமைச்சர் என்பதால் மத்திய புலனாய்வு அமைப்புதான் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், ஐகோர்ட்டு தீர்ப்பு உங்களுக்கு எதிராக வந்த பிறகும் உங்கள் தலைவியை போலவே சட்டத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்து கொண்டு வரும் உங்களுக்கு, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பெயரையும், படத்தையும் முன்னிலைப்படுத்துவதில் தயக்கம் இருக்காது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.