கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாகை மீனவர்களை காணலாம் 
செய்திகள்

கேரளாவில் புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்கள் 23 பேர் சொந்த ஊர் திரும்பினர்

கடந்த 14-ந் தேதி கொச்சின் துறைமுகம் அருகே அமனி தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வீசிய டவ்தே புயலில் சிக்கி 23 மீனவர்களும் மாயமானார்கள்.

மாலை மலர்

நாகப்பட்டினம்:

நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது50). இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் அவரும், நாகையை சேர்ந்த 22 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதியில் இருந்து கேரளாவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள், கடந்த 14-ந் தேதி கொச்சின் துறைமுகம் அருகே அமனி தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வீசிய டவ்தே புயலில் சிக்கி 23 மீனவர்களும் மாயமானார்கள். பின்னர் இவர்கள் படகுகளுடன் லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கினர்.

இதைத்தொடர்ந்து நாகை மீனவர்களை கேரள மீன்வளத்துறையினர் மீட்டு கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து மீனவர்களை 2 படகுகளில் நாகைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 25-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கு மீனவர்கள் வந்தனர். அப்போது பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படவில்லை. இதனால் பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்கக்கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டதால் அங்கிருந்து புறப்பட்ட மீனவர்கள் நேற்று நாகை துறைமுகத்துக்கு வந்தடைந்தனர்.

அப்போது மீனவர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.