விபத்து பலி 
செய்திகள்

வாடிப்பட்டியில் இன்று காலை பஸ் மோதி தொழிலாளி பலி

வாடிப்பட்டியில் இன்று காலை பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது29), கூலி தொழிலாளி.

இவர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். வாடிப்பட்டி பெட்ரோல் பங்க் முன்பாக அவர் நடந்து சென்றபோது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி தனியார் பஸ் வந்தது. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மூளை சிதறி அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர் திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (55 ) என்பவரை கைது செய்தனர்.