நிர்மலா சீதாராமன் 
செய்திகள்

இந்தியர்களின் வெளிநாட்டு ரகசிய சொத்துகள் பற்றி விசாரிக்க வருமானவரித் துறையில் தனிப்பிரிவு

இந்தியர்களின் வெளிநாட்டு ரகசிய சொத்துகள் பற்றி விசாரிக்க வருமானவரித் துறையில் தனிப்பிரிவைத் தொடங்குவதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்தார்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் வருமானவரித் துறையின் 14 விசாரணை இயக்ககங்கள் செயல்படுகின்றன. அவற்றின் பிரதான பணி, வருமானவரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடத்துவது, கணக்குகளை முடக்குவது, பல்வேறு முறைகளில் செய்யப்படும் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை திரட்டுவது ஆகியவை ஆகும். இந்நிலையில் வருமானவரித் துறையின் விசாரணை இயக்ககங்களில், வெளிநாட்டு சொத்து விசாரணைப் பிரிவுகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன.

இந்தியர்களின் ரகசிய வெளிநாட்டு சொத்துகள், வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள பணம் குறித்து இந்தப் பிரிவு விசாரணை நடத்தும்.

இந்த பிரிவைத் தொடங்குவதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்தார். அதன்பிறகு, கடந்த நவம்பரில் வருமானவரித் துறையின் 65 பணியிடங்களை வெளிநாட்டு சொத்து விசாரணைப் பிரிவுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் மாற்றியது.

தனிநபர்களின் ரகசிய வெளிநாட்டு சொத்துகள் தொடர்பாக வருமானவரித் துறைக்கு பல்வேறு உள்நாட்டு, சர்வதேச வட்டாரங்கள் மூலம் எண்ணற்ற தகவல்கள் தற்போது வருகின்றன. அவை குறித்து அலசி ஆராயவே புதிய விசாரணைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக இத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT