கோப்புப்படம் 
செய்திகள்

டெல்லிக்கு இயக்கப்பட்ட விமானத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த 4 பயணிகளுக்கு கொரோனா

இங்கிலாந்துக்கு மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா பரவுவதை தொடர்ந்து அந்த நாட்டுக்கு விமான போக்குவரத்தை டிசம்பர் 23-ந் தேதி முதல் கடந்த 7-ந் தேதி வரை மத்திய அரசு தடை செய்திருந்தது. பின்னர் 8-ந் தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இதில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தால் மட்டுமே இந்தியா வர அனுமதிக்கப்பட்டனர்.

அப்படி இருந்தும் நேற்று முன்தினம் டெல்லி வந்த பயணிகளில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லண்டனில் இருந்து 186 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் காலையில் டெல்லி வந்தது.

இதில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது புதிய வகை கொரோனாவா என கண்டறிய அடுத்தகட்ட பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்துக்கு மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.