செய்திகள்

திராவிட கட்சிகள் மீது தமிழக மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்: அன்புமணி ராமதாஸ்

திராவிட கட்சிகள் மீது தமிழக மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மாலை மலர்

தர்மபுரி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரியை காப்போம் என்ற விழிப்புணர்வு பேரணியை பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒகேனக்கல் பிலிக்குண்டு பகுதியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அகண்ட காவிரி இன்றைக்கு வறண்ட காவிரியாக மாறிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும் எனில் முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

காவிரியில் நீர் வருவதை தடுக்க கர்நாடக ரூ.5,900 கோடி செலவில் கட்டப்போகும் மேகதாது தடுப்பணையை அனுமதிக்க கூடாது. காவிரி ஆற்றின் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை தமிழக அரசு கட்ட வேண்டும். பவானி ஆற்றில் இருந்து வரும் சாயக்கழிவுகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

44,000 சதுர கிலோமீட்டர் பாசன வசதி பெரும் காவிரி டெல்டா பகுதி விவசாய நிலங்களை, பறவைகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி போல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்க வேண்டும்.

தி.மு.க. மத்திய அரசில் இருக்கும் போது கொண்டு வந்த கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அமைக்கும் திட்டத்திற்கு தற்போதைய தமிழக அரசு அனுமதி அளித்ததை ரத்து செய்ய வேண்டும்.

காவிரி ஆறு தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய ஒரே தமிழக பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே. கர்நாடக உறுப்பினர்கள் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த போது நமது தமிழக உறுப்பினர்கள் அமைதியாகதான் இருந்தார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் விழிப்புணர்வு பயணம் இன்றைக்கு ஆரம்பித்தது அல்ல, 20 வருடங்களுக்கு முன்னரே டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாலாறு, இங்கே பவானி ஆறு மீட்பு போராட்டம் 3 நாள் சைக்கிள் பேரணியை நடத்தியுள்ளார். தொடர்ந்து பசுமை தாயகம் சார்பாக ஆறுகளை காப்பதற்காக போராடிக்கொண்டே உள்ளோம்.

இதுவரை தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு செயல்படாத திராவிட கட்சிகள் மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர். எங்களுடைய விழிப்புணர்வு பயணத்திற்கு நிச்சயமாக மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக அடுத்தது பா.ம.க. ஆட்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.