செய்திகள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ- மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இலவசமாக படிக்க முடியும். நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது.

இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துரிதப்படுத்தி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாளை (7-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த வருடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்து பின்னர் பூர்த்தி செய்து சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 20-ந்தேதி மாலைக்குள் சென்னைக்கு வந்து சேர வேண்டும்.

தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் 3500 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த வருடம் கூடுதலாக 350 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்டு கட்-ஆப் மார்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ரேங்க் பட்டியல் தயாரித்து அதன் பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும்.

இதுகுறித்து மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், ‘பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது போல எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கும் ஆன்லைன் விண்ணப்பம் வினியோகிக்கப்படும். மாணவர்கள் பூர்த்தி செய்து வருகிற 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார்.