செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்- ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30 தேதி வரை நடத்த பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி,  சட்டமன்ற காங். தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த துறை மானியக் கோரிக்கைகளை எந்த நாளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது, கட்சிகளின் உறுப்பினர்கள் பேசும் நேரம், கவன ஈர்ப்பு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30 தேதிவரை நடத்தப்படும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.  

சுமார் 23 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தயாராகி வருகின்றன.

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க. கடிதம் கொடுத்துள்ளதால் சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.