சென்னை:
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து முதுநிலை மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களை பெறாமல் இருந்த தமிழக அரசுக்கும், இந்த 50 சதவீத இடங்கள் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்காத இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அபராத தொகையை தமிழக அரசு, கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கும், மருத்துவக் கவுன்சில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை செய்துவரும் அமைப்புக்கும் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் திவ்யா ஷரோன், நாமக்கலை சேர்ந்த டாக்டர் எம்.காமராஜ் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான ‘நீட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் தங்களிடம் உள்ள முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், அதை செய்வதில்லை. அரசுக்கு ஒப்படைக்க வேண்டிய இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக்கொள்கின்றன. இதனால் எங்களை போன்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்’ என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மார்ச் மாதம் விசாரித்தார். அப்போது, 2000-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்கு முறை சட்டத்தின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்களிடம் உள்ள முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளதா?, முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் எத்தனை?, அரசு எத்தனை இடங்களை நிரப்பியது? உள்ளிட்ட பல கேள்விகளை சரமாரியாக கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள், இந்திய மருத்துவக் கவுன்சில், தனியார் கல்வி நிறுவனங்கள் என்று அனைத்து தரப்பினரும் பதில் அளித்து மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கை, கோடை விடுமுறை நாளான நேற்று சிறப்பு வழக்காக நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த 130 பக்கம் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
அய்யன் திருவள்ளுவர், ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் - வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்று கூறியுள்ளார். இதற்கு விளக்கம், ‘நோய் என்ன?, நோய்க்கான காரணம் என்ன?, நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆய்வு செய்து சிகிச்சை செய்யவேண்டும்’ என்பதாகும்.
எனவே, டாக்டர்கள் என்பவர்கள் நோய், நோயை பற்றிய விவரங்கள், அதை எப்படி சரி செய்வது? போன்ற ஞானத்தை பெற்றிருப்பது அவசியமாகும். அப்படிப்பட்ட டாக்டர்களை தான் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உருவாக்கவேண்டும். எனவே, நல்ல திறமையான, கல்வித் தகுதியான நபர்களை டாக்டராக உருவாக்கினால் தான், சமுதாயம் நன்மை பெறும்.
இந்த புனிதமான மருத்துவ சேவையில் அரைவேக்காடு மாணவர்களை நுழைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தேசிய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகின்றன. முன்பு எல்லாம் அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான் இருந்தன. நாளடைவில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாகின. இதன்பின்னர் கல்வித்தகுதிகள் எல்லாம் புறம்தள்ளப்பட்டு, பணம் மட்டுமே இந்த படிப்புக்கு முதல் தகுதியாகிவிட்டது.
தற்போது மனுதாரர்கள் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில், முதுகலை மருத்துவ படிப்பில் சேர்ந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
ஆனால், மாநில அரசுக்கு வழங்கவேண்டிய 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழங்காததால், தகுதிவாய்ந்த ஏழை மருத்துவ மாணவர்களால், உயர் படிப்பில் சேரமுடியவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தனது கடமையை செய்யத்தவறியுள்ளன.
ஆனால், மராட்டியம், ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 50 சதவீத இடங்களை ஆண்டுதோறும் அம்மாநில அரசுகளிடம் முறையாக ஒப்படைத்துள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள 50 சதவீத இடங்களை சேர்த்து, அம்மாநில அரசுகள், முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான விளக்க குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்த நடைமுறை தமிழகத்தில் இல்லை. தனியார் கல்லூரிகளிடம் 50 சதவீத இடங்களை பெறவில்லை. அந்த இடங்கள் குறித்து, விளக்கக் குறிப்பேட்டில் தமிழக அரசு குறிப்பிடவும் இல்லை. எனவே, முதுநிலை மருத்துவ படிப்புக்காக தமிழக அரசு நடப்பு கல்வியாண்டில் (2017-18) வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டை ரத்து செய்கிறேன்.
தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தலா 50 சதவீத இடங்களை குறிப்பிட்டு, புதிதாக விளக்கக் குறிப்பேட்டை தமிழக அரசு வெளியிடவேண்டும். அதன்பின்னர், இந்த இடங்களுக்கு எல்லாம் பொதுவான மருத்துவக் கவுன்சிலிங்கை தமிழக அரசு நடத்த வேண்டும். இதில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், ஒருவேளை அந்த கல்வி நிறுவனங்கள் 50 சதவீத இடங்களை ஒப்படைக்க முன்வந்தால், அதை அரசு பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ.) 15 சதவீத இடஒதுக்கீட்டை, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களே நிரப்பிக்கொள்கின்றன. இதை ஏற்க முடியாது. இந்த இடங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு முறையான பொது கவுன்சிலிங்கை நடத்தி, இந்த இடங்களை நிரப்ப வேண்டும். ஏற்கனவே, வெளிநாடு வாழ் இந்தியர்களை, முதுநிலை மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேர்த்திருந்தால், அது ரத்து செய்யப்படுகிறது.
மேலும், தமிழக அரசு முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் விவரங்களை இணையதளத்தில் புதிதாக வெளியிடவேண்டும். அதில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைகளில் எத்தனை முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன?, கவுன்சிலிங் எப்போது நடைபெறும்?, இந்த கவுன்சிலிங்கில் எத்தனை பேர் பங்கேற்றனர்?, எத்தனை பேருக்கு இடம் கிடைத்துள்ளது?, இடம் கிடைத்தும் படிப்பில் சேராத மாணவர்கள் எத்தனை பேர்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கடைசி நேரத்தில் சில முடிவுகளை எடுப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சினைகளையும், குழப்பத்தையும் தவிர்க்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள், இந்திய மருத்துவக் கவுன்சில் போன்றவை வரும் கல்வியாண்டுக்கு முன்கூட்டியே தங்களது அறிவிப்புகள், புதிய விதிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
மேலும், முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்கு முறை சட்டம், கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் உள்ள விதிகளின்படி, 50 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடம் இருந்து சட்டரீதியாக தமிழக அரசு கேட்டு பெற்று இருக்கவேண்டும். அதை தமிழக அரசு செய்யவில்லை
மேலும், 50 சதவீத இடங்களை பெறாமல், அந்த இடங்களை பல கோடி ரூபாய்க்கு தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். தனியார் கல்லூரிகள் வளம்பெற, இந்த அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். இந்த 50 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகளிடம் இருந்து அரசு பெறாததால், அந்த இடங்களில் வசதிப்படைத்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால் தகுதியும், திறமையும் வாய்ந்த அப்பாவி ஏழை மருத்துவ மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்த செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை 4 வாரத்துக்குள், சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிக்கு வழங்கப்பட வேண்டும்.
ஒரு சட்டத்தை ஒரு அமைப்பு உருவாக்கினால், அந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை அந்த அமைப்பு கண்காணிக்க வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில்தான், முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை தனியார் கல்லூரிகள் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விதி கொண்டுவந்துள்ளது. இந்த விதிகளின்படி, இந்த இடங்கள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? என்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் கண்காணித்து இருக்கவேண்டும். தன்னுடைய சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை. மாறாகத்தான் கொண்டுவந்த சட்டத்தை தானே மீறி செயல்படும் விதமாக மருத்துவக் கவுன்சில் செயல்பட்டுள்ளது. இது கேலிக்கூத்தான செயலாகும். எனவே, இந்திய மருத்துவக் கல்வி கவுன்சிலுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை ‘ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆப் தமிழ்நாடு’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை செய்துவரும் அமைப்புக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கை வருகிற ஜூன் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.