செய்திகள்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டசபையில் இன்று 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். #TNBudget2018 #OPS

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 8-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அந்த கூட்டத்தொடர் ஜனவரி 12-ந் தேதி வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து சட்டசபையில் கடந்த பிப்ரவரி 12-ந் தேதியன்று, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் ப.தனபால் திறந்துவைத்தார்.

இந்த நிலையில், பட்ஜெட் குறித்த அறிவிப்பை சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் கடந்த 7-ந் தேதியன்று வெளியிட்டார். அதில், சட்டசபையின் அடுத்த கூட்டம் 15.3.2018 அன்று கூடும் என்றும், காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும். #TNBudget #TNBudget2018 #TNbudgetsession #OPS