பருவ மழை பெய்யாததால் தமிழ்நாடு முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 4 குடிநீர் ஏரிகளும் வறண்டு விட்டதால் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் மக்களை மிக கடுமையாகப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தந்து உதவ கேரளா முன்வந்துள்ளது. கேரளா குடிநீர் வாரியம் சார்பில் 20 லட்சம் லிட்டர் குடிநீரை அனுப்ப முடியும் என்றும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் அந்த தண்ணீரை கொண்டு வர முடியும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக சென்னையில் இன்று ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கு ஒருமுறை 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தர முடியுமா? என கேட்டு கேரள முதல்வருக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளோம்.
காவிரி நீர் பகிர்வு தொடர்பான எந்த கோரிக்கையாக இருந்தாலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்பு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.