செய்திகள்

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கூடாது: பிரதமருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

மாலை மலர்

சேலம் உருக்காலையை (செயில்) தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது என இந்திய உருக்கு ஆணையத்திற்கு அறிவுறுத்தும்படி நான் ஏற்கனவே தங்களுக்கு 26.4.2017 அன்று எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்ததை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தனியார்மயமாக்கும் பணிக்காக ஒரு சட்ட ஆலோசகர், சொத்து மதிப்பீட்டாளர் மற்றும் பரிவர்த்தனை ஆலோசகரை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் நியமித்திருப்பதாகவும், தனியார்மயமாக்கும் பணியை  துரிதப்படுத்தி டெண்டர் விடுவதற்காக ஆலோசனைக் குழுவை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் உருக்காலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

சேலம் உருக்கு ஆலையானது, பல ஆண்டுகளாக உயர்தர எஃகுவை தயாரித்து உலகப் புகழ் பெற்றதுடன், தமிழகத்தின் அடையாளச் சின்னமாகவும் உள்ளது.


2000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் இந்த ஆலையின் நிதி நிலையானது 2015-16ல் இருந்ததைவிட 2016-17ல் மேம்பட்டிருப்பதாக எனது கவனத்திற்கு வந்தது. மேலும், இந்த ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.2005 கோடி வழங்கி ஆதரவு அளித்தது. 2015ம் ஆண்டு விரிவாக்கப் பணிகளுக்காக மேலும் ஒரு ஆண்டு அவகாசத்தை நீட்டித்தது.

ஆலையின் சமீபத்திய நஷ்டங்களுக்கான காரணங்கள் குறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டும். மேலும் ஆலையின் திறனை மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், சேலம் உருக்கு தொழிற்சாலை மீண்டும் லாபமீட்டும்  பொதுத்துறை நிறுவனமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.