செய்திகள்

மெரினா கடற்கரை சாலையில் மறியல் - மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக கைது செய்தது போலீஸ்

மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். #CauveryIssue #CauveryManagementBoard #DMK #MKStalin

மாலை மலர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில்  சென்னை அண்ணா சாலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அண்ணா சிலை அருகில் சிறிது நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் அண்ணா நினைவிடம் நோக்கி வாலாஜா சாலையில் பேரணியாக சென்றனர். மறியல் போராட்டம் பேரணியாக உருவெடுத்ததால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து முன்னேறினர். காமராஜர் சாலையை சென்றடைந்ததும், அனைவரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது.

இதையடுத்து ஸ்டாலினை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் சாலையை விட்டு நகர மறுத்தார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். அவருடன் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட தலைவர்களும்  கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து கட்சி தொண்டர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கலைக்க போலீசார் முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.