செய்திகள்

தமிழகம் முழுவதும் பலத்த மழை: அணைகளில் நீர் மட்டம் உயர்வு

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து உள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து உள்ளது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த மாதம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த வந்த குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் இந்த மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது.

பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் நேற்று 18.60 அடியாக உயர்ந்தது. அதன்பின்பும் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2086 கனஅடியாக இருந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 45.10 அடியாக உயர்ந்தது. இரு அணைகளின் நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 3 அடி வரை உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், கேரளாவில் பெய்யும் மழையாலும் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. நேற்றும், இன்றும் அருவியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது.

குமரி மாவட்டத்தில் இன்று காலையிலும் மழை பெய்தபடி உள்ளது. பலத்த மழையாக இல்லாமல் சாரல் மழையாக பெய்து வருகிறது.

கடையநல்லூர் மலையில் உள்ள கருப்பாநதி அணைப் பகுதியிலும் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள கொப்பருவியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் பெரியாற்றுப்படுகை, கல்லாற்று படுகையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு 50 கன அடி தண்ணீர் வருகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 78.60 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் மேலும் 5.20 அடி உயர்ந்தது. இதனால் நீர்மட்டம் 83.80 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2804 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 66.27 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்த மழையினால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 22.24 அடி உயர்ந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் 88.91 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1913.43 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

மணி முத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 43 அடியாகவும், 61.80 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் மேலும் 2.7 அடி உயர்ந்து 64.50 அடியாகவும், 65.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 3.25 அடி உயர்ந்து 68.75 அடியாகவும், 51.38 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் மேலும் 3.08 அடி உயர்ந்து 54.46 அடியாகவும் உள்ளது.

குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பிவிட்டது. இதன் உபரி நீர் மதகின் வழியே வெளியேறி வருகிறது.

நீர் பிடிப்பு பகுதியில் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது.

நேற்று 124.70 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று 126.10 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 3655 கன அடியாக அதிகரித்துள்ளது.

பெரியாறு அணையில் முதல் போக சாகுபடிக்கான தண்ணீர் போதுமானதாக உள்ளது. எனவே அணை 25-ந் தேதி திறக்கப்பட உள்ளது.

வைகை அணை நீர் மட்டம் 36.81 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடி நீர் வருகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 55 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.53 கன அடியாக உள்ளது. அணைக்கு 110 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

கூடலூர், பந்தலூர் தாலுக்காகளில் கனமழை மற்றும் கடுங்குளிர் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

கனமழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தவிர பாண்டியார், பொன்னானி, பொன்னம்புழா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஊட்டி- கூடலூர் சாலை யில் மண்சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்தன.

கூடலூர் தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்குள் புகுந்தது அங்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்கள் அருகில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி- மைசூரு சாலையின் 27-வது வளைவில் ராட்சத மரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கூடலூர், பந்தலூர், தேவாலா ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பந்தலூர் அருகே உள்ள தேவாலா அட்டியில் சோழவயல் கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இது வரை 25 குளங்கள் நிரம்பி உள்ளன. கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை தற்போது 42 அடியை தாண்டி உள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் தற்போது 85 அடியாக உள்ளது.

வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடு முறை அளித்து கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டிருந்தார்.

கொடைக்கானலில் இருந்து கிளாவரை வரை 45 கி.மீ. தூரம் உள்ள சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் தாமதமாகவே செல்கின்றன. கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் பெருமாள் மலையில் ராட்சத மரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைப் பகுதிகளான அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை, டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணை மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

குற்றாலம் மலைப்பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று அதிகாலை 2 மணி முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலையில் பழைய குற்றாலத்தில் வெள்ளம் குறைந்தது. அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவி, ஐந்தருவிகளில் தொடர்ந்து தடை நீடித்தது. தொடர்ந்து நேற்று முழுவதும் குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இன்று காலை வரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. இதையடுத்து பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்தது. இதனால் தலையணையில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.