செய்திகள்

27-ந்தேதி பேச்சுவார்த்தை: பஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்குமா?

போக்குவரத்து கழக பஸ் தொழிலாளர்களின் 13-வது ஊதிய உயர்வு குறித்து நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.

மாலை மலர்

அரசு போக்குவரத்து கழங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படும்.

2013-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் காலம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிந்தது. புதிய ஊதிய உயர்வு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆண்டு காலமாக ஊதிய ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்படாமல் உள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவிடம் எடுத்துரைத்தது. ஆனால் இதுவரையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்காமல் போனதால் தமிழகம் முழுவதும் திடீரென போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதால் எழுத்து பூர்வமாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவும் முடியாது. 27, 28 ஆகிய தேதிகளில் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார். இதனை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு 24-ந்தேதி வெளிவருகிறது. 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து 27-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஐ.என். டி.யூ.சி., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.24 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. தொ.மு.க. தொழிற்சங்க பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தொழிலாளர்களின் உணர்வையும் நிலைமையையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் மோசமான நிலைக்கு தொழிலாளர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள்.