செய்திகள்

வேறு நபருடன் செல்போனில் பேசியதால் தகராறு: ரெயிலில் இருந்து தள்ளி மனைவி கொலை- கணவர் கைது

மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை தவறாக புரிந்து கொண்டு ரெயிலில் இருந்து மனைவியை கணவர் தள்ளியதில் உடல் நசுங்கி பலியானார்.

நகரி:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அதுதோஷ்சமார். இவரது மனைவி அல்பனா குமாரி (23). இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.

ரெயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கடலகுடுரு கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அல்பனா குமாரி ரெயில் கதவு அருகே நின்று கொண்டு செல்போனில் யாருடனோ பேசி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த அதுதோஷ்சமார் மனைவி செல்போனில் பேசி கொண்டிருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். காதலனிடம் பேசி கொண்டிருப்பதாக சந்தேகம் அடைந்து தகராறு செய்தார். இதில் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

திடீரென்று அதுதோஷ் சமார் மனைவி அல்பனா குமாரியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் ரெயில் அடியில் சிக்கிய அல்பனா குமாரி உடல் நசுங்கி பலியானார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் விஜயவாடா ரெயில் நிலையத்திற்கு வந்து நின்ற போது அதுதோஷ்சமாரை போலீசார் கைது செய்தனர்.