செய்திகள்

டி20 கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை

முனவீராவின் அதிரடி ஆட்டத்தால் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

மாலை மலர்

பின்னர் 40 நிமிடங்கள் காலதாமதமாக 7.40 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்தனர். ஷர்துல் தாகூர், ரகானே நீக்கப்பட்டனர்.

இந்திய அணி விவரம்:-

1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. லோகேஷ் ராகுல், 4. மணீஷ் பாண்டே, 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. புவனேஸ்வர் குமார், 10. சாஹல், 11. பும்ரா.

இலங்கை அணி விவரம்:-

1. டிக்வெல்லா, 2. தரங்கா, 3. முனவீரா, 4. மேத்யூஸ், 5. பிரியஞ்சன், 6. பெரேரா, 7. ஷனாகா, 8. பிரசன்னா, 9. தனஞ்ஜெயா, 10. உதானா, 11. மலிங்கா.

டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இலங்கை அணி 4 ரன்கள் எடுத்தது. அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிக்வெல்லா தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விளாசினார்.

3-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தரங்கா, அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். 3-வது வீரராக முனவீரா களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். முதல் 3 ஓவரில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் குவித்தது.

இதனால் 4-வது ஓவரை வீச விராட் கோலி சுழற்பந்து வீச்சாளரான சாஹலை அழைத்தார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் முனவீரா. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் டிக்வெல்லா ஸ்டம்பை பறிகொடுத்தார். டிக்வெல்லா 14 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் பும்ரா 1 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

3-வது விக்கெட்டுக்கு முனவீரா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். 5-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இலங்கை மூன்று பவுண்டரிகள் அடித்தது. இதனால் பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் 60 ரன்கள் சேர்த்தது

7-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் மேத்யூஸை அபாரமாக ஸ்டம்பிங் செய்து வெளியே அனுப்பினார் டோனி. 9-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் முனவீரா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விரட்டினார்.

11-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து அரைசதம் அடித்தார் முனவீரா. தொடர்ந்து விளையாடிய அவர் குல்தீப் யாதவ் பந்தில் க்ளீன் போல்டானார். முனவீரா 29 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் சேர்த்தார். முனவீரா அவுட்டாகும்போது இலங்கை 11.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் ரன் விகிதம் சரிய ஆரம்பித்தது. சாஹல் வீசிய 14-வது ஓவரில் பெரேரா (11), ஷனகா (0) ஆட்டம் இழந்தனர். 17-வது ஓவரில் பிரசன்னா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

பிரியஞ்சன் தாக்குப்பிடித்து விளையாட இலங்கை 18-வது ஓவரில் 8 ரன்னும், 19-வது ஓவரில் 13 ரன்னும், கடைசி ஓவரில்  13 ரன்களும் எடுக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. பிரயஞ்சன் 40 பந்தில் 41 ரன்கள் எடுத்தும், உதானா 10 பந்தில் 19 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.