செய்திகள்

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு மீது தனிக்கோர்ட்டு நாளை தீர்ப்பு

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி தனிக்கோர்ட்டு நாளை(வெள்ளிக்கிழமை) வழங்குகிறது.

மாலை மலர்

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி தனிக்கோர்ட்டு நாளை(வெள்ளிக்கிழமை) வழங்குகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவரான சுகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை கடந்த மாதம் 23-ந் தேதி டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில், இடைத்தரகர் சுகேஷ் தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நீதிபதி பூனம் சவுத்ரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சுகேஷ் தரப்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி வாதாடும்போது, “இந்த விவகாரத்தில் உள்ளபடி பயன் அடைபவர் டி.டி.வி.தினகரன். சுகேஷ் அவருக்கு உதவி செய்வதாக மட்டுமே உறுதி அளித்துள்ளார். இதில் பயன் அடைபவரான தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள போது சுகேசுக்கு ஜாமீன் வழங்குவதில் எந்த தவறும் கிடையாது. வழக்கின் சாட்சியங்களை சுகேஷ் எந்த வகையிலும் கலைக்க மாட்டார். எனவே, இந்த வழக்கில் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது போல சுகேசுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என்றார்.

டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் பல்பீர் சிங், “இந்த விவகாரத்தில் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை டெல்லி போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. சுகேஷ் சாட்சியங்களை கலைக்க முற்படுவார் என்று கருதுவதால் அவருக்கு ஜாமீன் அளிப்பது பொருத்தமாக இருக்காது என்று இதே கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது. எனவே, அவருடைய இந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று வாதிட்டார்.