எல் பஷிர் நகரம் 
செய்திகள்

சூடான் நாட்டில் கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து சமூக சேவகி விடுவிப்பு

சூடான் நாட்டின் டர்பர் பகுதியில் கடந்த மாதம் கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து சமூக சேவகி விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாலை மலர்

கர்ட்டூம்:

உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டின் டர்பர் மாநிலத்தின் பெரும்பகுதி போராளிகளின் வசம் சிக்கியுள்ளது. அங்கு நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ஐ.நா.சபை சார்பில் பன்னாட்டு படையினரும், அமைதிப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை செய்வதற்காக பல நாடுகளை சேர்ந்த சமூக சேவகர்களும் தன்னார்வலர்களாக அங்கு தொண்டாற்றி வருகின்றனர்.

இவ்வகையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் வடக்கு டர்பர் பகுதியில் உள்ள எல் பஷிர் நகரில் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்தவாறு அங்குள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள வீட்டில் சில ஆண்டுகளாக வசித்து வந்தார்.

கடந்த மாதம் 8-ம் தேதி அந்தப் பெண்ணை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர், வயது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளிவராத நிலையில் அவரை கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் சூடான் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து சமூக சேவகி விடுவிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு டர்பர் மாநில துணை கவர்னர் முஹம்மது பாரிமா இன்று அறிவித்துள்ளார்.