சென்னை:
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காதர்பாஷா உள்ளிட்ட சில போலீஸ்காரர்கள், பழங்கால சாமி சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த சிலை கடத்தல் சம்பவம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இதுபோல சாமி சிலைகள் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமை அலுவலகம் திருச்சியில் அமைக்கப்பட வேண்டும். இந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரிக்க வேண்டும். இதற்காக இந்த கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவிக்கிறேன்’ என்றும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த உத்தரவில் சில சந்தேகங்கள் உள்ளதாகவும், அதை விளக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை பிறப்பித்த நீதிபதி மகாதேவன் தற்போது ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
இதனால், காணொலி காட்சி மூலம் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி முடிவு செய்தார். இந்த விசாரணை இன்று மாலையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டு பதிவுத்துறை மேற்கொண்டு வருகிறது.