செய்திகள்

சுத்தமல்லி அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை?: போலீசார் விசாரணை

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கோவையைச் சேர்ந்த ஒருவருடன் 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இதற்கிடையே சில வருடத்திற்கு முன்பு இளம்பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இதையடுத்து அந்த இளம்பெண் கொண்டாநகரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துவிட்டார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் இளம்பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் கல்லூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்று குழந்தையின் தந்தை பெயராக கள்ளக்காதலனின் பெயரை கொடுத்து சான்றிதழ் வாங்கினார்.

இதுபற்றி அறிந்த கள்ளக்காதலன் அந்த பெண்ணிடம் சென்று தகராறு செய்து குழந்தையை கொன்றுவிடு அல்லது யாரிடமாவது விற்றுவிடு என மிரட்டினார். இதனால் பயந்துபோன இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு புரோக்கர் உதவியுடன் பச்சிளங்குழந்தையை ஒரு தம்பதியிடம் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை விற்றார்களா? அல்லது கொலை செய்தார்களா? என கள்ளக்காதலனை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். #Tamilnews