கொலை 
செய்திகள்

மதுரை அருகே நடத்தையில் சந்தேகம்: தங்கையை வெட்டிக் கொன்ற வாலிபர்

மதுரை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கையை வெட்டிக் கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலவளவை அடுத்த கீழப்பட்டியைச் சேர்ந்த மோகன் மனைவி சகுந்தலா (வயது 26). இவர்களுக்கு சேதுபதி (9), காமாட்சி (7) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சகுந்தலாவுக்கும் மோகனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் சகுந்தலா கணவரை பிரிந்து 5 ஆண்டுகளாக தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சகுந்தலா அதே பகுதியில் வசிக்கும் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனை அவரது அண்ணன் சவுந்தரபாண்டியன் (வயது 30) தட்டிக்கேட்டார்.இருந்த போதிலும் சகுந்தலா கேட்க வில்லை.

இந்த நிலையில் அண்ணன்-தங்கை இடையே இன்று அதிகாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரராஜன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சகுந்தலா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்பி. சுபாஷ், மேலவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சகுந்தலாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கையை கொலை செய்த சவுந்தரபாண்டியனை தேடி வருகின்றனர்.